ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஜே.எஸ்.நகரைச் சேர்ந்த எல்.ஐ.சி அலுவலரான முருகேசன், கடந்த 2019 அக்டோபர் 5அன்று வெளியூர் சென்ற போது, வீட்டிலிருந்த 18 சவரன் நகை கொள்ளை போனது.
அதே போன்று குள்ளம்பாளையம் பார்வதி நகரைச் சேர்ந்த மாணிக்கத்தின் வீட்டில், கடந்த 2019 டிசம்பர் 10 அன்று வெளியூர் சென்ற போது வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகையைத் திருடினர். தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடந்து வருவதனால், இது குறித்து கோபிசெட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வந்தனர்.
பிடிபட்ட குற்றவாளி
இந்நிலையில் திருட்டில் தொடர்புடைய நபர் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளியில் உள்ளதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற தனிப்படை காவல் துறையினர், அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.