ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் அடிப்படையில் இன்று 11- ஆம் தேதி ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜராக காவல்துறையின் சார்பில் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி உள்ளார். வரும் அக்டோபர் 10-ஆம் தேதி ஈரோடு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக நீதிபதி மாலதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், “நான் பேசியதை தான் ராசாவும் பேசினார், அவர் மீது வழக்கு இல்லை. நான் சொன்னதில் பொய் என்ன உள்ளது. உண்மையை உண்மையாக பேசினேன். வாக்குகளுக்காக வார்த்தையை மாற்றி மாற்றி பேச மாட்டேன். நான் பேசியது உண்மை நான் ஓட்டிற்காக இல்லை, நாட்டிற்காக நிற்பவர்.
சனாதனம் வடமொழி சொல், சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது, உலகத்தில் உழவன் தான் உயர்ந்த குடி. இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் உயர்சாதி இந்துக்கள். இதில் உள்ள தலைவர்கள் சனாதனத்தை எதிர்க்க மாட்டார்கள். தமிழக அரசு இமானுவேல் சேகரனாருக்கு நினைவு மண்டபம் கட்டுவதாக அறிவித்ததை வரவேற்கிறேன். இது தேர்தல் அரசியல், இந்தியா கூட்டணி என்பது வேடிக்கையானது. இந்தியாவை காக்கும் கூட்டணி மேற்கு வங்காளத்தில் எதிர்த்து நிற்கிறது.
செந்தில்பாலாஜி வெளியில் பேசினால் பலர் உள்ளே செல்வார்கள். அண்ணா பிறந்தநாளில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய மாட்டார்கள். விடுதலை செய்தால் ஆதரிப்பேன், நடக்காது என்ற நம்பிக்கையில் தெரிவித்தேன். சாமியார் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடியும், சாமியாரின் தலைக்கு 100 கோடி அறிவித்தது, நடக்காது என்பதால் சொல்லிட்டு போறதுதான்” என்றார்.
சென்னையில் ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியை சரியாக ஆர்கனைஸ் செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது குறித்த கேள்விக்கு, “ஏ.ஆர்.ரகுமான் மிகச்சரியாக இருக்க வேண்டும் என நினைப்பார். நான் அந்த நிகழ்ச்சியை பார்க்கவில்லை, கவனிக்கவில்லை.
என்மீது உள்ள 128 வழக்கில் பெரும்பங்கு திமுகவினர் போட்டது தான். தேச ஒற்றுமை, இறையாண்மை பேசும்போது பாஜக கர்நாடகவை ஆளும் போது இதனை பார்ப்பதில்லை. தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள வளம் பொதுவானது. உரிய நதிநீரை பங்கீடு செய்யதாவரை காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு கிடையாது என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்வாரா?
இந்தியா கூட்டணியிடம் பேசி கட்சத்தீவை மீட்பார்களா? நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கட்சத்தீவு மீட்கப்படுமா என்ற கேள்விக்கு வெயிட் அண்ட் சி என்றார். நாளை சென்னையில் உள்ள வளசரவாக்கம் நீதிமன்றத்தில் விஜயலட்சுமி தொடர்புடைய வழக்கிற்காக நீதிமன்றத்தில் ஆஜராவது குறித்த கேள்விக்கு, சட்ட வல்லுனர்களின் கருத்துகளை கேட்டு நாளை ஆஜராகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உதயநிதிக்கு எதிராக ரூ.1 கோடி கேட்டு ஈபிஎஸ் மானநஷ்ட வழக்கு!