ஈரோடு:அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால், நாள்தோறும் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டி இருப்பதாகவும், பேருந்துகளை சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் மனு அளித்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்து உள்ள அனுமன்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்கள் அண்ணாநகர், வேமாண்டம்பாளையம், வெள்ளிவலசு, காமராஜபுரம், ஊஞ்சப்பாளையம், பழையபாளையம், முருங்கத்தொழுவு. இந்த கிராமங்களில் இருந்து 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் முகாசி அனுமன் பள்ளியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருவதற்கு ஏதுவாக, சென்னி மலையில் இருந்து எழுமாத்தூர் வரை செல்லும் அரசு பேருந்து, சம்பந்தபட்ட கிராமங்கள் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. தற்போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை 7 மணி முதல் 5 மணி வரை பள்ளி நேரத்துடன் சிறப்பு வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.