ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சிறுவலூர், அயலூர் உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் சுமார் ரூ.2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் குடிநீர் மற்றும் சாலை திட்ட பணிகளுக்கு பூமி பூஜையுடன் அடிக்கல் நாட்டும் பணிகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் இணைக்கப்படாத ஏரி குளங்கள் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்கப்படமாட்டது. 2017-18ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
6 முதல் 8ஆம் வகுப்புவரை டேப் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 8ஆம் வகுப்புவரை பள்ளிகள் திறக்க இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்தப் பின்னரே முடிவுகள் எடுக்கப்படும்.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு வகுப்புகள் எடுப்பது குறித்து அரசிடமிருந்து கடிதம் கிடைத்த பிறகுதான் முடிவு செய்யப்படும். தலைமை தேர்தல் அலுவலர் இன்று ஆய்வு கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கேற்ப 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும். சிறப்பு ஆசிரியர்களுக்கு மத்திய அரசு 500 ரூபாய் மட்டுமே வழங்குகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு தற்போது 10 ஆயிரம் ரூபாயாக வழங்கிவருகிறது. உடற்பயிற்சி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஏற்ப நிரப்பபட்டு வருகிறது. மற்ற ஆசிரியர் காலி பணியிடங்கள் குறித்து அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.