தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை இன்று (ஏப்ரல். 8) விதித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி அருகே மாதம்பாளையம் செல்லும் சாலையில் எஸ்பிஐ வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் மேலாளராகப் பணிபுரியும் கோயம்புத்தூரைச் சேர்ந்த 33 வயதுடைய நபருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து புஞ்சைபுளியம்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் வெங்கடாசலம் தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர்கள், அந்த வங்கிக்குச் சென்று மேலாளரை மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து அவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அதே வங்கியில் பணிபுரியும் 11 ஊழியர்களுக்குப் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வங்கி உயர் அலுவலர்கள் அறிவுறுத்தலின் பேரில் வங்கி கிளை இன்று மூடப்பட்டது.
இந்த வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களிடம் பவானிசாகர் அருகே உள்ள அய்யன்சாலை எஸ்பிஐ வங்கி கிளைக்குச் சென்று கணக்குகளை பராமரித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வங்கி கிளை மேலாளருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், வாடிக்கையாளர்களும் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஈரோட்டில் கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒலிப்பெருக்கி மூலம் அறிவிப்பு