'Say No To Single Use Plastic' என்ற பெயரில் ஈடிவி பாரத் ஊடகம் தேசிய அளவிலான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள புன்செய் புளியம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, விடியல் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு விடியல் சமூக நல அறக்கட்டளைச் செயலாளர் எஸ்.ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய அவர், 'பிளாஸ்டிக்கில் நல்ல பிளாஸ்டிக் என்று ஒன்றில்லை. பிளாஸ்டிக் மோசமானது, மிக மோசமானது என்றே பிரிக்கமுடியும். ஒரு நிமிடத்துக்கு ஒரு மில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பிளாஸ்டிக் பை அழிய 15 முதல் 1000 ஆண்டுகள் ஆகும். பிளாஸ்டிக்கினால் மனிதர்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் என அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. எனவே, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை அனைவரும் தவிர்க்க வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.