சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடியது திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே பேருந்து மற்றும் சரக்கு லாரி போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மைசூரிலிருந்து வெங்காய மூட்டைகள் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று உடுமலைப்பேட்டை செல்வதற்காக இன்று காலை 5 மணியளவில் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. 18வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால், லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் சாலை நடுவே சிதறி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்யும் பணியை மேற்கொன்டனர். கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விபத்தினால் பாதிப்படைந்த நகர்ப்புற போக்குவரத்து விரைவில் சீராகும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி அடிக்கடி திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விபத்து காரணமாக தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களுக்கிடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.