இன்றைய சூழ்நிலையில் சந்திரயான் 2 திட்டத்தில் நிலவுக்கு செயற்கைக்கோளை இஸ்ரோ செலுத்தி வெற்றிகண்டது உலக நாடுகளிடையே இந்தியா விண்வெளித் திட்டங்களில் சாதித்துவருவது ஊர்ஜிதமாகியுள்ளது. இந்நிலையில் நம் நாட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மிகப்பெரிய அளவில் விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வை நிரூபிக்கும் விதமாக நாசா நடத்திய தரவு சவால்கள் போட்டியில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவ மாணவியர் இருவர் சத்தமில்லாமல் சாதித்துள்ளனர். அமெரிக்கா நாட்டின் நாசா விண்வெளி அமைப்பு மற்றும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் வான் இயற்பியல் மையம் இணைந்து வானியல் புகைப்படங்களுக்கான தரவு சவால்கள் என்னும் போட்டியை சர்வதேச அளவில் இணையதளத்தில் நடத்தியது.
இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பங்கேற்று இணையதளத்தில் உள்ள அதற்கான பிரத்யேக வழிமுறையைப் பின்பற்றி புகைப்படங்களை உருவாக்கி சமர்ப்பித்தனர். இதில் சிறந்த புகைப்படங்களைப் பார்த்த நாசா அறிவியல் அறிஞர்கள் இதை அங்கீகரித்ததோடு புகைப்படங்களை வடிவமைப்பதற்கும் உதவியுள்ளனர்.