தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணை நீர்த்தேக்கம் 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி நீர் தேக்கம் கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அதனோடு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்துவருகிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் மற்றும் வடகேரளாவில் கடந்த ஆண்டு பெய்த பலத்த மழை காரணமாக கடந்த நவம்பர் மாதத்தில் முழு கொள்ளளவான 105 அடியை தொட்டது.
இந்நிலையில் கடந்த ஜனவரி 9ஆம் தேதி முதல் கீழ் பவானி வாய்க்காலில் எள் மற்றும் நிலக்கடலை பாசனத்துக்கு முதலாவது சுற்று நீர் திறக்கப்பட்டது. 10 நாள் திறப்பு மற்றும் 10 நாள் நிறுத்தம் என இடைவெளி விட்டு மொத்தம் 6 சுற்றுகள் நடைமுறைப்படுத்தப்படும். அவ்வாறு, கீழ் பவானி வாய்க்காலில் சுழற்சி முறையில் 5 சுற்றுகள் திறப்பு முடிந்து தற்போது இறுதிச்சுற்றான 6ஆம் சுற்றுக்கான தண்ணீர் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்பட்டது.