ஈரோடு:பண்ணாரி வனத்துறை சோதனை சாவடியில் 30 ரூபாய் லஞ்சம் கேட்டு வாகன ஓட்டுனரை தாக்கியதாக வனத்துறையினரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில் தற்போது வனவர் தீபக்குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுங்சாலையில் தமிழக கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரியில் சத்தியமங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சோதனை சாவடி உள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்க்கு சரக்கு வாகனங்கள் போவதும் வருவதும் வழக்கம்.
வனப்பகுதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு சோதனை சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படும். இந்நிலையில் இந்த சோதனை சாவடியில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படாமல் இருப்பதற்காக வனத்துறை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி பண்ணாரி வன சோதனை சாவடி வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் நோக்கி லாரி ஒன்று சென்றுள்ளது. அதனை அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுனர் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: ஆந்திராவில் பட்டியலின சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு.. 3 நாட்களுக்குப் பிறகு கால்வாயில் சிறுமியின் உடல் மீட்பு!
அப்போது சோதனைச் சாவடி பணியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் தீபக்குமார் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து ஓட்டுனரிடம் லஞ்சம் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் லஞ்சம் தர மறுத்ததால் காவலர்கள் ஆத்திரமடைந்ததாகவும் தட்டி கேட்ட ஓட்டுநரை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்பட்டது.
இதனை அறிந்த சக வாகன ஓட்டிகள் வனத்துறை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு வந்த வனத்துறை அதிகாரி வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாகன ஓட்டுனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென முன்னரே தாக்கப்பட்ட வாகன ஓட்டியை அழைத்து மீண்டும் தக்கினர்.
இது குறித்த வீடியோ வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் வெங்கேஷ் (பொறுப்பு) விசாரணை மேற்கொண்டார். இதில் லஞ்சம் கேட்டு ஓட்டுநரை தாக்கியதாக வனவர் தீபக்குமார், வேட்டை தடுப்பு காவலர் மூர்த்தி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து வெங்கேஷ் உத்தவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கொரிய நாட்டவரிடமிருந்து 5000 ரூபாய் லஞ்சம் - கையும் களவுமாக மாட்டிக் கொண்ட டெல்லி போக்குவரத்து போலீஸ்!