ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறி, வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் புகுந்து, விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாகி உள்ளன.
இந்நிலையில், அதிகாலை விளாமுண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய நான்கு காட்டு யானைகள் பவானிசாகர் நகர்ப்பகுதிக்குள் புகுந்தன. யானைகள் ஊருக்குள் வருவதைக்கண்டு பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இது குறித்து, உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதனிடையே, யானைகள் அப்பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான தங்கும் விடுதிக்குச் சென்று, அங்குள்ள சுற்றுச்சுவரை இடித்துத் தள்ளி சேதப்படுத்தின.