ஈரோடு: சத்தியமங்கலத்திலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்தாண்டு குண்டம் திருவிழா மார்ச் 21, 22ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதால் இன்று (மார்ச் 08) அதிகாலை பண்ணாரி அம்மன் கோயிலில் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. முன்னதாக பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து தெப்பக்குளத்தில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டு பண்ணாரி அம்மன், மாதேஸ்வரன் சாமிக்கு பூஜைகள் செய்து, அம்மனிடம் வரம் கேட்டு பூச்சாட்டுதல் விழா நடந்தது. தாரை தப்பட்டை உள்ளிட்ட மேளதாளங்களுடன் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் பக்திப் பரவசம் அடைந்த பெண்கள் ஆவேசத்துடன் சாமி ஆடினர். இதைத்தொடர்ந்து இன்று இரவு அம்மன், சப்பரம் திருவீதி உலா வரவுள்ளது.
இதையும் படிங்க:கரும்பு தோட்டத்தில் அட்டகாசம் செய்த காட்டு யானைகள் - திணறிய வன அதிகாரிகள்