ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி, சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, கெம்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் அதிகளவில் செண்டு மல்லி பயிரிட்டுள்ளனர். மூன்று மாத கால பயிரான செண்டுமல்லியில் மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில் உள்ள ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகிறது. விவசாய தோட்டங்களில் பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலத்தில் விவசாயிகளால் நடத்தப்பட்டுவரும் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு ஏல முறையில் பூக்களின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
செண்டுமல்லி பூ விளைச்சல் அதிகரிப்பால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விலை வீழ்ச்சி - _sathy_poo_rate
ஈரோடு: சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் செண்டுமல்லி பூ விளைச்சல் அதிகரிப்பால் செண்டுமல்லி பூவின் விலை வீழ்ச்சியடைந்தது, இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்
மேலும், இங்கு ஏலம் எடுக்கும் பூக்கள் கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில் ஆவணி மாதம், புரட்டாசி மாதங்களில் விசேஷ நாட்கள்,பண்டிகை காலம் என்பதால் செண்டுமல்லி பூவிற்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்து, அதிகளவில் செண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து அதிகரித்ததால் செண்டுமல்லி பூவின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பூ வரத்து அதிகரிப்பின் காரணமாக கிலோ ரூ. 8 முதல் ரூ. 30 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதன் காரணமாக பூக்கள் பறிக்கும் கூலி, சாகுபடி செலவிற்குகூட கட்டுப்படியாகவில்லை என செண்டுமல்லி பயிரிட்டுள்ள விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.