கோபிசெட்டிபாளையத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்ட நிகழ்ச்சி நடைபெற்ற திருமண மண்டபத்தின் முன்பு, தமிழ்நாடு பொது நூலகத் துறை ஒருங்கிணைந்த ஊர்ப்புற நூலகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
12ஆம் வகுப்பு கல்வித் தகுதியில், சிஎல்ஐஎஸ் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு பெற்று, 1514 நபர்கள், ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பணிக்கு சேர்ந்தபோது ரூ.4500 மட்டுமே ஊதியம் வழங்கப்பட்ட நிலையில் 13 ஆண்டுகளில் தற்போது ரூ.10 ஆயிரம் ஊதியம் பெற்று வருகின்றனர்.
இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் ஏழாவது காலமுறை ஊதியம் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை பதவி உயர்வோ ஊதிய உயர்வோ கிடைக்காத நிலையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில், கட்சி நிகழ்ச்சி வந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஊர்ப்புற நூலகர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மனு அளித்தனர்.