ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுப்பேட்டை, பட்டமங்கலம் கிராமங்களைச் சேர்ந்த 35 பள்ளி மாணவ, மாணவிகள் அருகிலுள்ள தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்றுவருகின்றனர். இந்நிலையில், பட்டமங்கலம் கிராமத்திற்கு வந்து செல்லும் அரசு பேருந்து, ஓட்டுநர்களின் மெத்தன போக்கால் இரண்டு நாள்களாக கிராமத்திற்குள் வருவதில்லை.
இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் காலை நேரம் மூன்று கி.மீ தொலைவு அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக நடந்து சென்று பவானிசாகர் - பன்னாரி சாலையில் உள்ள புதுபீர்கடவு பிரிவிலிருந்து பேருந்தில் ஏறி பள்ளி செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆனால் காட்டு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மாணவர்கள் காட்டுப்பகுதியில் நடந்து செல்ல அச்சமடைகின்றனர். எனவே காலை நேரத்தில் மேற்கண்ட கிராமங்களுக்கு பேருந்து இயக்க வேண்டும் என போக்குவரத்து கழக சத்தியமங்கலம் கிளை மேலாளரிடம் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பள்ளி மாணவர்கள். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், பொதுமக்கள், மாணவர்கள் இன்று காலை புதுப்பீர்கடவு பிரிவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வட்டாட்சியர் கணேசன், காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இரு நாள்களில் பேருந்து வசதி செய்துத்தருவதாக உறுதியளித்ததை அடுத்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக பவானிசாகர் பன்னாரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டு கோயில்களை மத்திய அரசு கையகப்படுத்த பாமக எதிர்ப்பு