ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள புலிகள் காப்பகம் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது வனப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சிறுத்தைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி அருகேயுள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக் கொல்வது தொடர்கதையாக உள்ளது. இதைத் தொடர்ந்து, பெரியகுளம் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக சிறுத்தை விவசாய தோட்டங்களில் நடமாடுவதோடு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அடித்துக்கொன்றது.
அதேபோல் கடந்த வாரம் குப்புசாமி என்பவரது விவசாய தோட்டத்தில் சிறுத்தை புகுந்து ஆடு ஒன்றை அடித்து இழுத்துச் செல்லும் காட்சி அங்கு பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. இதையடுத்து, வனத் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று அப்பகுதியில் கூண்டுவைத்தனர்.