ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள பெரியகுளம், சிக்கரசம்பாளையம், புதுவடவள்ளி, புதுகுய்யனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ஐந்து டன் பூக்கள் மகசூல் செய்யப்படுகின்றன. இங்குள்ள தோட்டங்களில் பறிக்கும் சம்பங்கி பூக்கள் சத்தியமங்கலம் மலர்கள் சந்தைக்கு கொண்டுச் செல்லப்பட்டு அங்கு வியாபாரிகள் முன்னிலையில் ஏலம் விடப்படும்.
கடந்த வாரம் சம்பங்கி கிலோ ரூ.100 வரை விற்பனையானது. இந்நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கும் சமூக இடைவெளி, தனித்திருத்தல் ஆகியவற்றை கடைப்பிடிக்கவும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக திருமண நிகழ்ச்சி, திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் தடை விதிக்கப்பட்டன.
இதன் காரணமாக பூக்களை வாங்க வியாபாரிகள் வராததால் மலர்கள் சந்தை மூடப்பட்டது. இதனால் சம்பங்கிப் பூக்களை வாங்க ஆளில்லாமல் போனது. சத்தியமங்கலம் பெரியகுளத்தில் சாகுபடி செய்த சம்பங்கிப் பூக்களை விவசாயிகள் பறிக்காமல் விட்டதால் செடிகளில் சம்பங்கிப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.