ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கரோனா பிரச்னையால் வேலையின்றி தவித்து வருவதாகவும், வறுமையில் வாடும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நெசவாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
வறுமையில் வாடும் நெசவாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரண நிதி!
ஈரோடு: கரோனா வைரஸ் காரணமாக வேலையின்றி தவித்துவரும் நெசவாளர்களுக்கு உதவும் வகையில் கரோனா நிவாரண நிதியாக தலா இரண்டாயிரம் ரூபாயை பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
இதையடுத்து நெசவாளர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான தாசப்பக்கவுண்டர்புதூரில் தமிழ்நாடு அரசு சார்பில் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு, 210 நெசவாளர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகையை வழங்கினார்.
இதையடுத்து பேசிய அமைச்சர், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழு, விவசாயிகள், கட்டடத்தொழிலாளர்கள் என அனைவருக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.