கோபியில் ரூ.2.8 கோடி கொள்ளை: 12 மணி நேரத்தில் பணம் பறிமுதல் செய்து 2 பேர் கைது ஈரோடு: கோபிசெட்டிபாளையம் பாரதி நகரில் புதிதாக வீடு வாங்க வைத்திருந்த 2.80 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பணத்தை, துரிதமாக செயல்பட்டு மீட்ட காவலர்களை பாராட்டி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், “கோபியை சேர்ந்த சுதர்சன் என்பவரது வீட்டில் வைத்து இருந்த 2.80 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் வந்தது.
அதைத் தொடர்ந்து டி.எஸ்.பிக்கள் ஆறுமுகம் (ஈரோடு டவுன்), சியாமளா தேவி (கோபி) தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளை குறித்து விசாரணை நடைபெற்றது. பல கட்ட விசாரணையில் இரண்டு தடயங்கள் கிடைத்தது. கொள்ளை நடந்த போது கிடைத்த ரத்த துளிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் செல்போன் சிக்னல், சிசிடிவி பதிவுகள், சிசிடிவி கேமராவில் இருந்த கைரேகை போன்றவற்றை வைத்து கொள்ளையர் யார் என்பது தெரிய வந்தது.
அதில் சுதர்சனின் நண்பர் ஸ்ரீதரன், அவரது உறவினர் பிரவீனை கைது செய்து அவர்களிடம் இருந்த 2.80 கோடி ரூபாயும், நகையும் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் பெரிய குற்றச் சம்பவமான இந்த கொள்ளை வழக்கில் 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் யார் எனபது உறுதி செய்யப்பட்டது. வழக்கமாக நகை கொள்ளையடிக்கப்பட்டால் முழுமையாக மீட்க முடியும். ஆனால் பணம் கொள்ளையடிக்கப்பட்டால், குற்றவாளிகள் குறைந்தபட்ச தொகையையாவது செலவு செய்து விடுவர்.
ஆனால் இந்த வழக்கில் உடனடியாக குற்றவாளிகள் கண்டறியப்பட்டதால் கொள்ளையடிக்கப்பட்ட முழு தொகையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கொள்ளை நடந்த வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா பழுதடைந்த நிலையில் அருகில் உள்ள கேமராவை வைத்தே கொள்ளையரை கண்டுபிடிக்க முடிந்தது. வணிக நிறுவனங்கள் மட்டும் இல்லாமல் ஒவ்வொரு வீடுகளிலும் காமிரா பொருத்த வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு 500 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் கொள்ளை முயற்சி தொடர்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இருசக்கர வாகனம் திருட்டு மட்டும் 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யவில்லை.
அதே போன்று வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் கடந்த ஆண்டு 24 வழக்குகள் பதிவான நிலையில் இந்த ஆண்டு 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு சாலை பாதுகாப்பிற்கு ஒரு கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 250 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மது அருந்தி வாகனம் ஓட்டியதாக தமிழக அளவில் ஈரோடு மாவட்டத்தில் மட்டுமே அதிக அளவு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இந்த அளவு வழக்கு பதிவு செய்யப்படவில்லை” என்றார்
இதையும் படிங்க:கோபிசெட்டிபாளையத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 2.80 கோடி கொள்ளை!