தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் எதிரொலியாக பல ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. அதன் ஒருபகுதியாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை பல ஆண்டுகளுக்குப் பிறகு முழுக்கொள்ளளவான 105 அடியை எட்டியுள்ளது.
அணையிலிருந்து கடந்த சில நாள்களில் அதிகபட்சமாக 8 ஆயிரத்து 160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று காலை முதல் அணையிலிருந்து 3 ஆயிரத்து 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள காலிங்கராயன் அணைக்கட்டு நிரம்பி அதன் முழுக் கொள்ளளவான 32 அடியை எட்டியுள்ளது. அணையிலிருந்து வெளியேறும் உபரி நீர் அணைக்கட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நிரம்பி கடல் போல் காணப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்தியூர், பவானி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அப்பகுதியிலுள்ள நீர் நிலைகள் நிரம்பி அதிலிருந்தும் வெளியேற்றப்படும் உபரி நீரும் காலிங்கராயன் அணைக்கட்டுக்கு வந்து சேர்வதால் வழக்கத்தை விட நீர் நிரம்பி காணப்படுகிறது.