ஈரோடு: பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கீழ்பவானி பிரதான கால்வாயில் முதல்போக நன்செய் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 102 அடியாக இருப்பதால் அணையில் இருந்து நன்செய் பாசனத்துக்கு முன்கூட்டியே இன்று (ஆகஸ்ட் 12) தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசாணை வெளியிட்டது.
இதன்படி பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் ஒற்றை படை மதகுகள் முதல்போக பாசனத்துக்கு அணை கால்வாய் மதகு பொத்தானை அழுத்தி அமைச்சர் முத்துச்சாமி தண்ணீர் திறந்து வைத்தார். அப்போது வாய்க்காலில் சீறிபாய்ந்து வந்த தண்ணீரை அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனண்ணி மற்றும் விவசாயிகள் மலர்தூவி வரவேற்றனர்.
முதற்கட்டமாக 500 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் நீர் திறப்பு படிப்படியாக 1000, 1500, 2300 கனஅடி என அதிகரிக்கப்படும். இன்று முதல் டிச 9ஆம் தேதி வரை அதாவது 120 நாள்களுக்கு மொத்தம் 23 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட உள்ளது.