பவானிசாகர் அணையிலிருந்து பவானி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேருராட்சிகள், கிராம ஊராட்சிகள் என ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தற்போது அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 92 அடியை எட்டியுள்ளது.
தற்போது பவானி ஆற்றில் செந்நிற மழைநீர் ஓடுகிறது. இந்தத் தண்ணீர் பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி, சத்தியமங்கலம் நகராட்சி நீரேற்று நிலையங்களில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டுவருகிறது.
செந்நிறத்தில் ஓடும் பவானி ஆறு இந்நிலையில் மண் கலந்து குடிநீர் செந்நிறத்தில் வருவதால் நீரை நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் காய்ச்சல் உள்ளிட்ட எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகாமல் பாதுகாப்பாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.