ஈரோடு: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல்கட்டமாக, 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் ஆரம்பப்பள்ளிகள் தொடங்கப்படுவதாக அரசு அறிவித்தது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுகாதாரப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஈரோட்டில் உள்ள அப்துல் கனி மதரஸா அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.
கற்றலை மேம்படுத்தும் ஓவியங்கள்
அதன்படி பள்ளி வளாகத்தில் உள்ள பொதுச்சுவர், படிக்கட்டுகள், தண்ணீர் தொட்டி என அனைத்து இடங்களிலும் கற்றலை மேம்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இதுகுறித்து பள்ளியின் ஆசிரியர் காயத்ரி பேசுகையில், “தமிழ்நாடு அரசின் ஆரம்ப பள்ளி திறப்பு அறிவிப்பால் ஆசிரியர்களும், மாணவர்களும் உற்சாக மனநிலையில் இருக்கின்றனர்.
ஆரம்ப பள்ளிகள் திறப்பையடுத்து தேசத்தலைவர்கள், உலக அதிசயங்கள், மலர்கள், மாதங்கள், உணவுப் பொருட்கள், போக்குவரத்து விதிகள், நாணயங்கள், தேசிய சின்னங்கள், இயலிசை நாடக காட்சிகள் உள்ளிட்ட ஓவியங்களை பள்ளி வளாகங்களில் திறந்து வைத்துள்ளோம்.
பாடப்புத்தகங்களே ஓவியங்களாக மாற்றப்பட்ட செயல், குழந்தைகளிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை” என்றார்.
இதையும் படிங்க:கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பள்ளிகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டும் - ராதாகிருஷ்ணன்