ஈரோட்டில் நடைபெற்ற வணிகர்கள் சங்கத்தின் கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பண்டிகை காலங்களில் கடைகளில் கரோனா ஆய்வு என்ற பெயரில் அபதாரம் விதிப்பதை தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைத்து வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா ஈரோடு , திருப்பூர் போன்ற மாவட்டங்களில் அறிவித்த சாய சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்காக 700 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு அறிவித்திருந்தார்.
இப்போது அந்த நிதி ஒதுக்கீடு 1500 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பொது சுத்திகரிப்பு ஆலை அமைத்தால் சிறு, குறு தொழில்கள் வளர்ச்சி அடையும். வேளாண் சட்டத்தின்படி வெங்காயம், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகளை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தற்போது வெங்காயம் விலை ஏறியது போல மற்ற பொருட்களின் விலையும் உயர வாய்ப்புகள் உண்டு. அதனை மீண்டும் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”தனி மனிதர்கள் வெங்காயம் உள்ளிட்ட பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் நிலைமை ஏற்படும் சூழல் உள்ளது. இது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக போய் சேர்ந்துவிடும். எனவே இந்த வேளாண் சட்டத்திருத்த மசோதாவால் பல லட்சம் பேர் வேலை இழக்கும் சூழல் நேரிடும். தேவைப்பட்டால் வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கருத்தரங்கு கூட்டமும் போராட்டமும் நடத்த தயாராக உள்ளோம்” என்றார்.
வியாபாரிகள் முகக்கவசம் அணிந்தும், கிருமிநாசினி பயன்படுத்தியும் வியாபாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கடைக்கு வருகிற பொதுமக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் வியாபாரிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர் என்றும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வேளான் சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!