ஈரோடு: தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக. 16) சத்தியமங்கலத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. ராஜேந்திரன் மற்றும் சங்க மாநில பொதுச் செயலாளர் பா. தினேஷ்குமார் கலந்துகொண்டனர்.
அரசு அறிவிப்புக்கு வரவேற்பு
தொடர்ந்து கூட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் பேசினார்.
அப்போது, பல்வேறு துறைகளில் இயங்கிவரும் நியாயவிலைக் கடைகளை ஒரே துறையில் கொண்டுவரப்படும் என்ற அரசு அறிவிப்புக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன் ஏற்கெனவே வழங்கப்பட்டுவந்த கரோனா கால பயணப்படி, ஊக்கத்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் அங்கு நிறைவேற்றப்பட்டன.
பணியிடங்கள்
இதைத்தொடர்ந்து நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "பல்வேறு துறைகளின்கீழ் இயங்கிவரும் நியாயவிலைக் கடைகள் ஒரே துறையில் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மாநில பதிவாளர் சுற்றறிக்கையின்படி நியாயவிலைக் கடையில் விற்பனையாளர் தவிர, வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இருந்தாலும், நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள கட்டுநர், அளவையாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
நியாயவிலைக் கடைப் பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கவேண்டும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும்
விற்பனை முனையத்தில் உள்ள பிராக்ஸி முறை அகற்றப்பட்டு, ஓடிபி முறையில் பொருள்கள் வழங்க உத்தரவிட வேண்டும்.
தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கியும், புதிய ஊதிய விகிதம் அமல்படுத்தப்படாமல் உள்ள இடங்களில் புதிய ஊதிய விகிதம் வழங்க வேண்டும்.
பணிவரன்முறை குறித்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும். பட்ஜெட்டில் நியாயவிலைக் கடைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.
அறிவிப்பும், சலுகையும் வேண்டும்
பணியாளர் நலன் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.
நியாயவிலைக் கடை பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, முன்களப் பணியாளர்களுக்கான சலுகையை வழங்க வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'கல்வி, வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் - 'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு வலியுறுத்தல்'