தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 2.7 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

By

Published : Dec 18, 2022, 3:42 PM IST

ஈரோடு:தமிழ்நாடு - கர்நாடக எல்லையில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் கேர்மாளம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேர்மாளம் வனச்சோதனைச்சாவடி அருகே சந்தேகப்படும் வகையில் வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் மூட்டை மூட்டையாக 2 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர் கேர்மாளத்தைச் சேர்ந்த பசுவண்ணா (38) என்பதும், அரிசியை கர்நாடகாவுக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது. ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்துடன் அவரைக் கைது செய்த போலீசார் ஆசனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதேபோல தாளவாடி அடுத்த தமிழ்நாடு - கர்நாடக எல்லை குருபரக்குண்டி அருகே தனி வருவாய் ஆய்வாளர் சு.தர்மராஜன் தலைமையில் வருவாய்த்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது அங்கு வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மூட்டை மூட்டையாக 700 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் ரேஷன் அரிசியைக் கடத்த முயன்றவர் கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமதுஅலி (48) என்பதும், கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச்செல்வதும் தெரியவந்தது. சரக்கு வாகனத்தையும் அரிசியையும் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கஞ்சா வேட்டை 3.0: விழுப்புரத்தில் 2 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details