ஈரோடு: தாளவாடி அடுத்த திங்களூர் ஊராட்சியில் கோட்டமாளம், சுஜில்கரை, காடட்டி, செலுமிதொட்டி, மந்தைகாடு, நீர்குண்டி மற்றும் கோட்டை தொட்டி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்த மலை கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது.
முக்கியமாக கோட்டமாளத்தை சேர்ந்த துரைசாமி (65) என்பவரது 15 மாடுகளுக்கும் அம்மை நோய் தாக்கியதில், ஒரு பசு உயிரிழந்துள்ளது. அதேபோல் கோட்டை தொட்டியைச் சேர்ந்த வரதன் என்பவரின் கன்று குட்டியும் அம்மை நோய் தாக்கியதில் உயிரிழந்தது.
இதனால் மலை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை அலுவலர்கள் மலை கிராமத்தில் முகாமிட்டு, கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தி அம்மை நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து இது குறித்து கேர்மாளம் வனச்சரக அலுவலர் தினேஷிடம் கேட்டபோது, “கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதால், அவைகள் (கால்நடைகள்) வனப்பகுதிக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது” என பதிலளித்தார்.
இதையும் படிங்க:புலி வருது..! புரளியால் பெரம்பலூர் மக்கள் பீதி; வனத்துறை விளக்கம்!