கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் ஈரோடு:கோபிசெட்டிபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கூகலூர், தாழைக்கொம்பு புதூர், சமைதாங்கி, குளத்துகடை மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, விவசாய நிலங்கள் வழியாக முழுமையாக மழைநீர் வெளியேற வழியில்லாத நிலையில், தாழைக்கொம்பு புதூர் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.
மேலும் ஊருக்குள் சூழ்ந்த மழைநீர், 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து மழைநீரானது, வீடுகளுக்குள் 3 அடி உயரத்திற்கு புகுந்ததால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கூகலூர் பேரூராட்சி, கோபி வருவாய்த்துறை, காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, அங்கு இருந்த இரும்புக் கதவு வழியாக தேங்கிய நீர் வெளியேற நடவடிக்கை எடுத்தனர். பின்னர் இது குறித்து வருவாய்த்துறையினர் நடத்திய விசாரணையில், பல ஆண்டு காலமாக மழை நீர் அப்பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் வழியாகவே பள்ளத்தைச் சென்றடைந்து வருகிறது.
இந்த நிலையில், நிலத்தின் உரிமையாளர், தடுப்புச் சுவர் அமைத்ததால் மழை நீர் வெளியேற வழியில்லாத நிலை ஏற்பட்டு, 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சூழ்ந்தும், 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், கனமழை காரணமாக கிராம மக்கள் சாலையில் தஞ்சமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சனாதன ஒழிப்பு விவகாரம்; "தனக்கு எதிராக உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு" - அமைச்சர் சேகர்பாபு தரப்பு வாதம்!