ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதிகளில் நேற்றிரவு (நவம்பர் 28) முழுவதும் விடாமல் கனமழை கொட்டித் தீர்த்தது. ஈரோடு மாவட்ட அளவில் மொடக்குறிச்சியில் 60 மி.மீட்டர் கனமழை பெய்து இரண்டாவது அதிக மழையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மொடக்குறிச்சி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உபரிநீர் வெளியேறி பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மழைத் தண்ணீர் அதிகளவில் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மொடக்குறிச்சி அருகேயுள்ள சாவடிப்பாளையம் ரயில்வே நுழைவுப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக ரயில்வே நுழைவுப்பாலத்தைக் கடந்து எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மழைநீரில் மூழ்கிய ரயில்வே நுழைவுப்பாலம் ரயில்வே நுழைவுப்பாலம் மூழ்கியுள்ளதால் பிரதான சாலைப் பகுதியில் உள்ள சாவடிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களும் அவசரத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாமல் சுமார் 20 கிமீ தூரம் சென்று கிராமங்களைச் சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழைநீர் தாமாக வடிந்தால் மட்டுமே சாவடிப்பாளையம் ரயில்வே நுழைவுப்பாலத்தைப் போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியும் என்பதால் மழை போன்ற பேரிடர் காலத்தில் 10 கிராம மக்களும் நகரங்களுக்குச் செல்ல வசதியாக மாற்று ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும் என்றும் இந்தப் பாலம் அடிக்கடி இதுபோல் தண்ணீரில் மூழ்கிவிடுவதால் இதனை ஆண்டு முழுவதும் எளிதாகப் பயன்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.