தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காங்கிரஸ் எம்பி வீட்டில் ரூ.300 கோடி ரோக்கம் பறிமுதல்; ராகுல் காந்தியையும் விசாரிக்க முருகானந்தம் வலியுறுத்தல்!

Dhiraj Sahu IT raid: காங்கிரஸ் எம்பிக்குச் சொந்தமான இடங்களில் இருந்து 300 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றிய விவகாரத்தில், ராகுல் காந்திக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் வலியுறுத்தியுள்ளார்.

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 11:15 AM IST

Updated : Dec 10, 2023, 1:08 PM IST

காங்கிரஸ் எம்பி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ராகுல் காந்தியிடம் விசாரிக்க வேண்டும்
காங்கிரஸ் எம்பி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ராகுல் காந்தியிடம் விசாரிக்க வேண்டும்

காங்கிரஸ் எம்பி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ராகுல் காந்தியிடம் விசாரிக்க வேண்டும்

ஈரோடு: பச்சப்பாளி பகுதியில் உள்ள ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் தீரஜ் சாஹுவிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில், தீரஜ் சாஹூ மற்றும் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் இதுவரை 300 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை வருமான வரித் துறையினர் சோதனையில் ரொக்கமாக 300 கோடி ரூபாய் கைப்பற்றியுள்ளது இதுவே முதல் முறை. இதன் மூலம் மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குறிப்பாக இவர், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோருக்கு நேரடியான தொடர்பில் இருக்கக் கூடியவர் என்பதால், அவர்களுக்கும் இந்த ஊழலில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்திக் கூறினார்.

இதையும் படிங்க:"மெனோபாஸ் கொள்கை இதுவரை வகுக்கப்படவில்லை" - எம்பி ரவிகுமார் கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதில்!

தொடர்ந்து பேசிய அவர், "மேலும் இது போன்று நாட்டின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களின் வீடுகளில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் சோதனையில் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது. இது காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் மற்றும் இந்தியா கூட்டணியில் இருக்கக் கூடியவர்கள், எந்த அளவிற்கு இருக்கிறார்கள் என்பது வெளி வந்துள்ளது" எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், "சென்னையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்களே, அதற்கான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். முதன் முறையாக திமுகவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அவர்களது கட்சி கரை வேட்டிகள் இல்லாமல் மழைநீர் பாதித்த இடங்களுக்குச் செல்லும் நிலைமை உருவாகியுள்ளது” என்றார்.

மேலும், “திமுகவினர் மழை பாதிப்பு குறித்து செய்தி வெளியிடும் செய்தியாளர்களை மிரட்டுகிறார்கள். அதற்கு உதாரணம் ஆர்.எஸ்.பாரதியின் மகன் மழைநீர் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரை ஒருமையில், மரியாதைக் குறைவாக பேசுவதை சமூக வலைத்தளப் பக்கம் ஒன்றில் பதிவிட்டு இருந்தார். அது மிகவும் கண்டத்திற்குரியது. அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பாஜக தலைவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிர்வாகிகள்.. தேனியில் நடந்தது என்ன?

Last Updated : Dec 10, 2023, 1:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details