கல்குவாரி உரிமம் கேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தொழிலாளிகள் - பேச்சுவார்த்தைக்குப்பின் வாபஸ் ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மலையப்பபாளையம் குவாரியில் கல் உடைக்கவுள்ள உரிமத்தினை புதுப்பிக்கக்கோரி நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 75 குடும்பத்தினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். கொத்தடிமைகள் மற்றும் கல் உடைப்போர் சங்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதப் போரட்டம் இன்று சுமூக பேச்சுவார்த்தையில் முடிவடைந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நம்பியூர் வருவாய் வட்டாட்சியர் மாலதி, நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சுபா, ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் 15 நாட்களில் குவாரியினை ஆய்வு செய்து கனிமவளத்துறைக்கு அறிக்கை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் உண்ணாவிரதப் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.
கடந்த 2021ம் ஆண்டு குவாரி உரிமத்தை நீட்டிப்பு செய்ய கொத்தடிமைகள் மற்றும் கல் உடைப்போர் சங்கம் சார்பில் விண்ணப்பித்த போது, குவாரி இருக்கும் இடத்தில் குடியிருப்புகள் உள்ளதாகக் கூறி குவாரி உரிமத்தை நீட்டிப்பு செய்ய மறுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Vellore: திடீரென காலில் விழுந்த பெண்.. அதிர்ந்து போன கலெக்டர்!
கடந்த 1999ம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த 80 குடும்பத்தினர் மீட்கப்பட்டு, அவரவர் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் ஈரோடு மாவட்டம், கோபி தாலுகாவைச் சேர்ந்த 14 குடும்பத்தைச் சேர்ந்த 60 பேரை அப்போதைய திமுக அரசு மீட்டு வந்தது.
கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்களுக்கு கல் உடைக்கும் தொழில் தெரியும் என்பதால், ஒழலக்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட மலையப்பபாளையத்தில் 5.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் அடுக்குபாறை நிறைந்த கல்குவாரியில் பாறைகளை கையால் உடைக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து ஒவ்வொரு 5 வருடத்திற்கு ஒருமுறை குவாரி உரிமத்தை புதுப்பித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு குவாரி உரிமம் முடிவுற்றது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குவாரி இயங்கி கொண்டு இருந்த போதே, வீட்டுமனைக்கும் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் 2021ம் ஆண்டு குவாரி உரிமத்தை நீட்டிப்பு செய்ய கொத்தடிமைகளாக மீட்கப்பட்டவர்கள் விண்ணப்பித்தபோது, வட்டார வளர்ச்சி அலுவலர்களும், ஈரோடு மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகளும், குடியிருப்பு உள்ளதாகக் கூறி குவாரி உரிமத்தை நீட்டிப்பு செய்ய மறுத்து விட்டனர்.
இது தொடர்பாக இரண்டரை ஆண்டுகளாக 60 பேரும் கனிம வளத்துறை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு பல முறை நேரில் சந்தித்து மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 75 குடும்பத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நம்பியூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் குவாரி தொழிலாளர்கள் நிரந்தர வேலை கேட்டு நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதையும் படிங்க:Kanyakumari Dog Show: 300-க்கும் மேற்பட்ட நாய்கள்..களைகட்டிய குமரி நாய்கள் கண்காட்சி!