ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள எரங்காட்டுப்பாளையம் பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுவந்தது.
கடந்த ஒரு மாதமாக பவானி ஆற்றுக் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை எனவும், 15 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் சப்ளை செய்யப்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டிவந்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீரான முறையில் குடிநீர் விநியோகிக்க வலியுறுத்தி புஞ்சைபுளியம்பட்டி - காவிலிபாளையம் சாலையில் காலிக் குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த புஞ்சைபுளியம்பட்டி காவல் துறையினர், நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவர், காவல் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குடிநீர் பைப்லைன் உடைப்பு ஏற்பட்டதால் சரிவர குடிநீர் விநியோகிக்க இயலவில்லை எனவும், பைப்லைன் உடைப்பு சரிசெய்யும் பணி நடைபெற்றுவருவதால் இரண்டொரு நாள்களில் குடிநீர் விநியோகம் சீராகும் என்றும் பொதுமக்களிடம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதன் காரணமாக புஞ்சை புளியம்பட்டி - காவிலிபாளையம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.