ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மத்தியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
பண்ணாரி சோதனைச்சாவடியில் இருந்து திம்பம் - ஆசனூர் வழியாகச் செல்லும் சரக்கு வாகனங்களில் வனவிலங்குகள் அடிபட்டு இறப்பதால் கடந்த 2019ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட ஆட்சியர் திம்பம் மலைப்பாதையில் இரவு நேரப் போக்குவரத்துக்குத் தடை விதித்தார்.
பின்னர் விவசாயிகள் மக்கள் போராட்டம் காரணமாக, இந்த உத்தரவை வனத்துறை கடைப்பிடிக்க முடியவில்லை. இதற்கிடையே உயர் நீதிமன்றத்தில் இதுகுறித்து நடந்த வழக்கில் வாகனத்தில் அடிபட்டு உயிரிழக்கும் வன உயிரினங்களைக் காப்பாற்ற, மாவட்ட ஆட்சியரின் உத்தரவை பிப். 10ஆம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியது. அதன்படி, பிப்.10ஆம் தேதி முதல் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை இரவு நேரப்போக்குவரத்துக்கு உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இதுகுறித்து ஈரோட்டில் பிப்.9ஆம் தேதி புதன்கிழமை மாவட்ட நிர்வாகம் மற்றும் விவசாயிகள் இடையே நடந்த சாலை பாதுகாப்புக்குழு கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அவர்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.
பண்ணாரி சோதனைச்சாலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் தடையை நீக்கக்கோரி தாளவாடி பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள், விவசாயிகள், வணிகர்கள் நேற்று(பிப்.10) பண்ணாரி சோதனைச் சாவடியில் போராட்டம் நடத்தி எதிர்ப்புத் தெரிவித்தனர். போராட்டக்குழுவினர் 3 கோரிக்கைகளை முன்வைத்தனர்.
முதலாவதாக திம்பம் மலைப்பாதையில் அனைத்து வாகன இரவு நேரப்போக்குவரத்து தடையை முற்றிலும் அகற்ற வேண்டும். இரண்டாவதாக உயர் நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மூன்றாவது தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு சுமூகத் தீர்வு எட்ட உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் காய்கறி விவசாயிகள், மண்டி லாரி ஓட்டுநர்கள், அனைத்து அரசியல் கட்சியினர் என 22 அமைப்புகள் பங்கேற்றன. காலை 11 மணிக்குத் தொடங்கிய போராட்டம் நண்பகல் வரை நீடித்தது. போராட்டத்துக்கு ஆதரவாகத் தாளவாடி, ஆசனூர், தலமலையில் காய்கறி மண்டி, தேநீர்க் கடைகள், விவசாய அங்காடி கடைகளை அடைத்து கடைக்காரர்கள் அரசின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
பண்ணாரி சோதனைச்சாலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் விவசாயிகள் தரப்பில் திம்பம் மலைப்பகுதி இரவு நேரப் போக்குவரத்துக்குத் தடை விதிப்பது காரணமாக, விவசாயப் பொருட்களை உரிய நேரத்தில் கொண்டு சென்று சந்தைப்படுத்த முடியாது எனவும்; இதனால் உரிய விலை கிடைக்காது; வருவாய் இழப்பு ஏற்படும் என்ற புகார் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பகலில் அறுவடை செய்து இரவு நேரத்தில், கொண்டு சென்றால் மட்டுமே அதிகாலை நேரத்தில் அதற்கான உரிய விலை கிடைக்கும். மேலும் பொருள்கள் சேதம் ஆவதுடன் அழுகி வீணாகும்.
அதனுள் அதன் உயிர் தன்மையும் பாதிக்கும். இதனால் தாளவாடி மலைப்பகுதியில் சாகுபடி செய்யும் தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், காலிபிளவர் போன்ற காய்கறிகள் தேக்க நிலை ஏற்படும் என்றனர், விவசாயிகள்.
இதனிடையே, 1455 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் சிறுத்தை, யானை, புள்ளிமான் உட்பட 155 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சிறு விலங்குகள், பறவைகள் கணக்கிடப்படவில்லை.
கடந்த ஆண்டில் மட்டும் ஆசனூர், தாளவாடி பகுதியில் 3 சிறுத்தைகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தன. முக்கியமாக வாகனத்தில் அடிபட்டு காயம் ஏற்படும் புலிகள் அதிகம் எனப் புலிகள் கள இயக்குநர் கிரண் ரஞ்சன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவில் போலி பேர்வழிகள் சிலர் உள்ளனர்... இன்னும் 2 நாட்களில்... - அமைச்சர் தா.மோ. அன்பரசன் எச்சரிக்கை