தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 15, 2019, 5:22 PM IST

ETV Bharat / state

மக்களவைத் தேர்தல் புறக்கணிப்பு: மலைக்கிராம மக்கள் துண்டுப்பிரசுரம் விநியோகம்

ஈரோடு : மல்லியம்மன் துர்கம் மலைக்கிராமத்தில் சாலை வசதி அமைக்கப்படாததால் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக அக்கிராம மக்கள் சார்பில் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

மல்லியம்மன் துர்கம்

சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் இருக்கும் அந்த அடர்ந்த வனப்பகுதியில் மல்லியம்மன் துர்கம் கிராமம் ஒன்று உள்ளது. 200-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து நகரத்திற்குள் செல்ல ஏழு கிலோ மீட்டர் தூரம் நடக்க வேண்டிய சூழல் உள்ளது.

மின்சாரம் மற்றும் சாலை வசதி இல்லாத இந்தக் கிராமத்திற்கு தற்போது சோலார் விளக்குகள் பொருத்தி மின்வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில், மல்லியம்மன்துர்கம் கிராம மக்கள் கடம்பூர் -மல்லியம்மன் துர்கம் வரை சாலை அமைக்கக்கோரி பல மாதங்களாக வனத் துறையிடம் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

வனத் துறை அனுமதி வழங்க மறுப்பதால் இக்கிராம மக்களின் கோரிக்கை தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் விரக்தியடைந்த அக்கிராம மக்கள், 2019 மக்களவைத் தேர்தலில் 'ஓட்டுப் போடமாட்டோம்' என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரம் சத்தியமங்கலம் மற்றும் கடம்பூர் மலைப்பகுதிகளில் விநியோகம் செய்துவருகின்றனர். இதில், 'கடந்த 70 ஆண்டுகளாக சாலை வசதி கேட்டு மனு அளித்தும் அரசு எந்தவித நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டிவருகிறது. புலி, யானை ஆகிய வனவிலங்குகள் வசிக்கும் இந்த அடர்ந்த வனப்பகுதியில் எந்த பாதுகாப்புமின்றி வாழ்ந்து வருகிறோம்.

எட்டாம் வகுப்பு வரை இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கடம்பூர் சென்று மேல்படிப்பைத் தொடர சாலை வசதி இல்லாமல் தவித்துவருகின்றனர். உடல்நிலை சரியில்லாதவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லவேண்டிய அவல நிலை உள்ளதால் மல்லியம்மன் துர்க்கம் கிராமத்திற்கு சாலை வசதி செய்துதரும் வரை வாக்களிக்க மாட்டோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details