வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி வட்டாட்சியரை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஈரோடு:கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கடந்த செப்டம்பர் மாதத்தில் வருவாய்த்துறை சார்பில் பொதுமக்களின் வீட்டுமனை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட பல்வேறு பட்டா பிரச்னைகளுக்குத் தீர்வு காண சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதில் சத்தியமங்கலம் தாலுகாவில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பம் அளித்திருந்தனர். இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட வருவாய்த்துறை அதிகாரிகள், இதுவரை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள், நேற்று (டிச.11) இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் தலைமையில், சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம், வீட்டுமனை பட்டா கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு பட்டா வழங்கப்படும் என வட்டாட்சியர் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க:“உச்ச நட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன்” - ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!