கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் புகுந்த காட்டுயானை ஒன்று விவசாய நிலங்களை சேதப்படுத்தி, விவசாயிகள் 3 பேரை தாக்கிக் கொன்றது. அதனால் அச்சமடைந்த அப்பகுதிமக்கள் யானை வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துவந்தனர். அதன்படி வனத்துறையினர் யானையின் நடமாட்டைத்தை கண்டறிந்து நேற்று(ஜூன் 11) அதிகாலை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
அதையடுத்து அந்தக் காட்டுயானை தனிவாகனம் மூலம் ஒசூரிலிருந்து சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் வனப்பகுதிக்கு வந்தடைந்தது. அதனையறிந்த புங்கார், காராட்சிக்கொரை கிராம மக்கள் இப்பகுதியில் யானையை விடுவித்தால் எங்கள் கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காராட்சிக்கொரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் தகவலறிந்த வனத்துறை, வருவாய்துறை, காவல்துறையினர் அங்கு விரைந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.