தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் ஈரோடு: சம்பத் நகர் அருகே நியூ டீச்சர்ஸ் காலனியில் மருத்துவர் சக்திவேல்-பூர்ணிமா தம்பதியினர், தனது பத்து வயது மகனுடன் வசித்து வந்துள்ளனர். பூர்ணிமா அகமதாபாத்தில் தங்கி படித்து வரும் நிலையில், சக்திவேல் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக மருத்துவராகப் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 30) காலை அவர் வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந் அக்கம்பக்கத்தினர், அவரது வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் கையில் ஊசி செலுத்தப்பட்டிருந்த நிலையில் மயங்கி கிடப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வடக்கு காவல் நிலைய போலீசார், சக்திவேலை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் முன்னதாகவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அவரது உடலை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், சக்திவேல் தனக்கு தானே அதிகளவு மயக்க மருந்து செலுத்தி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: "நீ தம்பியை நல்லபடியா பார்த்துக் கொள்"- உருக்கமான ஆடியோ பதிவிட்டு தாய் தற்கொலை!