ஈரோடு: கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு முழுவதும் 50 விழுக்காடு பயணிகளுடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 500க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், தனியார் பேருந்துகள் இன்னும் இயக்கப்படவில்லை.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, "கரோனா தாக்கம் காரணமாக பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது 50 விழுக்காடு பயணிகளுடன் பேருந்து போக்குவரத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
இப்போதைக்கு சாத்தியமில்லை
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் 50 விழுக்காடு பயணிகளுடன் பேருந்தை இயக்குவது என்பது சாத்தியமில்லை. எனவே, இப்போதைக்கு தனியார் பேருந்துகளை இயக்குவது குறித்து முடிவு செய்யவில்லை. இப்போது இயக்கினால் எங்களுக்கு மேலும் நஷ்டத்தை ஏற்படுத்தி விடும்.
ஒரு சில மாவட்டங்களில் பெயரளவிற்குதான் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றன. 100 விழுக்காடு பயணிகளுடன் பேருந்து இயக்க அரசு அனுமதி அளித்தால் மட்டுமே தனியார் பேருந்துகளை இயக்குவோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமலுக்கு வந்த புதிய தளர்வுகள்: புதுச்சேரிக்கு பேருந்து சேவை தொடக்கம்!