ஈரோடில் தனியார் பேருந்தும் ஆம்புலன்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்து! ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே அரசூரில் நேற்று (செப் 30) தனியார் பேருந்தும் ஆம்புலன்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈரோட்டில் பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து கர்நாடக மாநிலம் மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தனியார் பேருந்து கோபிசெட்டிபாளையம் அரசூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, சத்தியமங்கலத்தில் இருந்து கோபிச்செட்டிபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் பேருந்து சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்புகளில் மீது மோதி நின்றதில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும், ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் 5 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க:“குயில்லன் பார்ரே” என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட நபரை குணமடையச் செய்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாதனை!
பின்னர், படுகாயமடைந்த அனைவரும் கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இந்த விபத்திற்கான காரணம் குறித்தும், காயம் அடைந்தோர் குறித்தும் கடத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, 54 நான்கு பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் பேருந்து குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழித்தடத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்த நிலையில்,30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். உயிரிழந்தோர் மற்றும் படுகாயம் அடைந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:குன்னூரில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து; இதுவரை 8 பேர் உயிரிழப்பு.. முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!