ஈரோடு மாவட்டத்தில் நெசவுத் தொழில்தான் பிரதானம். விசைத்தறித்தொழில் வளர வளர கைத்தறி வீழ்ச்ச்சியை நோக்கிப்போனது. விலை குறைச்சலாக, பளபளக்கும் விசைத்தறி ஆடைகளுடன், போட்டியிட முடியாமல் பின்வாங்கியது கைத்தறித்தொழில். இந்நிலையில், ஊரடங்கு ஏற்படுத்திய இடைவெளி, அந்தத் தொழிலை இன்னும் அதிகமாகப் பாதித்தது.
இது குறித்து சென்னிமலை நெசவாளர் சிவசுப்பிரமணி கூறுகையில், ”அரசு, கூட்டுறவுச் சங்கங்களுக்குத் தரவேண்டிய தள்ளுபடி மானியத் தொகை கடந்த பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால், கூட்டுறவுச் சங்கங்கள் நலிவடைந்துவருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கைத்தறித் தொழிலையே நம்பியுள்ளனர்.
ஏற்கனவே, குறைந்த கூலிக்கு நெய்து, சிரமமான சூழ்நிலையில்தான் வாழ்ந்துவருகிறோம். இந்நிலையில், 40 நாள்களுக்கும் மேலாக ஊரடங்கு என்பது எங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதித்துள்ளது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கியதைப் போல், இடைக்கால நிவாரணமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கி அரசு இக்கட்டான சூழ்நிலையில் எங்களுடன் நிற்க வேண்டும். தப்பிப் பிழைத்துக் கிடக்கும் எங்கள் தொழிலை மீட்டெடுக்க உதவ வேண்டும்”என்றார்.
விலைவாசி ஏறுவதுபோல, கைத்தறியை நம்பி வாழும் நெசவாளர்களின் கூலி உயர்வதில்லை. ஆண்டுதோறும் கூலியை உயர்த்தினால்தான், இந்தத் தொழிலை அவர்களால் தொடர முடியும். இல்லையெனில், மாற்றுத்தொழிலைத் தேடி கைத்தறி நெசவாளர்கள் செல்லும் கட்டாய நிலை ஏற்படும்.