ஈரோடு மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளும், ஈரோடு மாநகராட்சிப் பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளும் இயங்கி வருகின்றன. விசைத்தறிகளை நம்பி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் விசைத்தறிகளுக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரம் விரைவில் ரத்து செய்யப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பு, விசைத்தறியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பாதிப்பின் காரணமாக 60 நாள்களுக்கும் மேலாக தொழிற்சாலைகள் இயங்காமல், தொழிலாளர்களுக்கான கூலியையும், தொழிற்சாலை வாடகை, மின்சாரக் கட்டணங்களை மிகவும் சிரமப்பட்டு செலுத்தி வரும் நிலையில் இதுபோன்ற அறிவிப்பு விசைத்தறிகளை முடக்கி விடும் அறிவிப்பாக உள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்து விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவதைப்போலவே விசைத்தறியாளர்களுக்கான மத்திய அரசின் அறிவிப்பை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.