ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தனியாருக்குச் சொந்தமான கோழிப்பண்னையொன்று செயல்பட்டுவருகிறது. இந்தக் கோழிப் பண்னையில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்தக் கோழிப்பண்ணையைச் சுற்றி பத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக இந்தக் கோழிப்பண்ணையிலிருந்து ஈக்கள் அதிகளவில் வெளியேறி மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் வருவதால் நோய் தொற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால், பண்ணையிலிருந்து வெளியேறும் ஈக்களைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர், வருவாய் துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பெயரில், சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்ரமணியனும், வருவாய் துறை அலுவலர்களும் நேரில் சென்று நிறுவன மேலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
அப்போது கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுவரும் நிலையில் நிறுவனத்திலிருந்து அதிகளவிலான ஈக்கள் வெளியேறுவதால் பொதுமக்கள் கடும் அச்சத்திற்குள்ளாகியுள்ளதாகவும், ஈக்களைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கையை ஓரிரு நாளுக்குள் எடுத்திடாவிட்டால் அடுத்தக்கட்டமாக சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோழிப்பண்ணை உரிமையாளர்களை எச்சரிக்கும் வருவாய்த்துறையினர் இதனையடுத்து கோழிப் பண்ணை நிறுவனத்தினர் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
இதையும் பார்க்க: டெல்லியில் ஒரே நாளில் 201 பேர் குணமடைந்தனர்!