கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் மிக முக்கிய நடவடிக்கையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடித்திட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது.
ஆனால், ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை அரசியல் கட்சியினர் உள்ளிட்டவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமோ, அக்கறையோ செலுத்தாததைக் காண முடிகிறது.
சுகாதாரத்துறையினர், மருத்துவத் துறையினர், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றிட வேண்டும் என்று மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான காய்கறிச் சந்தைகள், மருத்துவமனைகள், மளிகைக் கடைகளில் குறிப்பிட்ட தூரத்தைக் குறிப்பிட்டு வட்டங்களை வரைந்து வருகின்றனர்.
சமூக இடைவெளியுடன் உணவு வாங்கிச் சென்ற பொதுமக்கள் ஆனால், இந்த சமூக இடைவெளிக் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவது அவசியமற்றதாகவே அனைவருக்கும் தோன்றி வருகிறது. இந்த நிலையில் ஏழை, எளிய மக்களுக்காக அம்மா உணவகங்களில் அதிமுக சார்பில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கும் திட்டம் மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் இன்று (ஏப்.24) காலை உணவு தயாரிக்கப்பட்டு வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டன. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மிகவும் சாதாரண ஏழை, எளிய மக்கள் எவ்வித அவசரமும் காட்டாமல் மிகுந்த ஆர்வத்துடன் அக்கறையுடன் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து உணவு வகைகளைப் பெற்றுச் சென்றனர்.
சாதாரண மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி, இலவசமாக உணவு வகைகளை வாங்கிச் செல்வதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருப்பதாக பொதுநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.