ஈரோடு: தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் உள்ளடக்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாட்டில் சுமார் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டைகள் வைத்துள்ளனர்.
இவர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையங்களில் வாழ்வோருக்கும் நியாயவிலைக் கடைகள் மூலமாகப் பொங்கல் பரிசுத் தொகுப்பானது வழங்கப்படும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி, ஏலக்காய் 10 கிராம், திராட்சை தலா 50 கிராம், பாசிப் பருப்பு அரை கிலோ, ரவை ஒரு கிலோ, மல்லி தூள், நெய், கடுகு, சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், உளுத்தம் பருப்பு அரை கிலோ, கடலை பருப்பு 250 கிராம், கோதுமை ஒரு கிலோ, புளி 250 கிராம், உப்பு ஒரு கிலோ, முழு கரும்பு ஒன்று ஆகிய 21 வகையான பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், வரும் ஜனவரி 4ஆம் தேதிமுதல் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளதால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் ஈரோடு மாவட்ட வழங்கல் - நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் இலாஹி ஜான் நுகர்ப்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் பொங்கல் தொகுப்புக்கான பொருள்கள் பேக்கிங் செய்யும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
முழுவீச்சில் தயாராகும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மேலும், பொருள்களின் தரம், பேக்கிங் சரியான எடை அளவில் செய்யப்படுகிறதா என பேக்கிங் செய்யும் தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட வேண்டிய பெரும்பாலான பொருள்கள் இருப்பில் உள்ளதாகவும் திராட்சை, முந்திரி தேவையான அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் இந்த இரு பொருள்களும் நாளை கிடங்குகளுக்கு வந்து சேர்ந்துவிடும் எனவும், அந்தந்த நியாயவிலைக் கடைகளுக்கு ஜனவரி 3ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு பைகள் அனுப்பிவைக்கப்படும் என்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் இலாஹி ஜான் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குன்னூரில் கடும் குளிர்: பார்வைக்கு இதமளிக்கும் நீர்ப்பனி மேகமூட்டம்