ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள காவிலிபாளையத்தில் 489 ஏக்கர் குளம், புங்கம்பள்ளியில் 85 ஏக்கர் குளம், நொச்சிக்குட்டையில் 60 ஏக்கர் குளம், நல்லுாரில் 60 ஏக்கர் குளம் உள்ளது. இவை பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளன. மேலும் இப்பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குட்டைகள் உள்ளன.
கோடை வெயில் காரணமாக குளம், குட்டைகள் நீரின்றி வறண்டு மைதானம் போல் காட்சியளிக்கின்றன. இதனால், நிலத்தடி நீர் மட்டமும் கணிசமாக குறைந்து விட்டது. கடந்த ஆண்டு பெய்த ஓரளவு மழையால் தேங்கி நின்ற நீரும் சுட்டெரிக்கும் வெயிலில் காணாமல் போய் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.
விவசாயத்திற்காக ஆழ்த்துளைக் கிணறு போட்டால் 1200 அடிக்கு மேல் தான் தண்ணீீர் கிடைக்கிறது என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "சோளம், மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து கிடப்பதால் கால்நடை தீவனங்கள் விலை உயரும் அபாயம் உள்ளது.
விவசாயிகளை காக்க கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மானிய விலையில் கால்நடை தீவனம் வழங்க வேண்டும். வறட்சியை தாங்கி வளரும் பயிர் ரகங்களுக்கான விதை, இடுபொருள்களை மானியத்தில் வழங்க வேண்டும். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு குளம், குட்டைகளை அத்திகடவு - அவிநாசி திட்டத்தில் சேர்க்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆம்னி பேருந்துகளை அதிகரிக்க வெளிமாநில மக்கள் கோரிக்கை!