ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில், கடந்த சில மாதங்களாக இரட்டை கொலை, கொள்ளைச் சம்பவம் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்க தவறிய காவல் துறையினரைக் கண்டித்து, அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் சென்னிமலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், “சென்னிமலையில் நிகழ்ந்த இரட்டை கொலை, கொள்ளைச் சம்பவத்தில் இதுவரை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு முன்பு இல்லாத வகையில் சென்னிமலையில் கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது. இதற்கு திமுக அரசின் மெத்தனப்போக்குதான் காரணம்.
கொலை, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யவில்லை. இது குறித்து சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கவனத்திற்கு கொண்டு சென்றும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் ஜீவதார உரிமையாக காவிரி ஆறு உள்ளது.
தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்றுத் தரும் பொறுப்பு முதலமைச்சருக்கு உள்ள நிலையில், தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் உடன் நல்ல நட்பில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் பேசி தமிழகத்திற்கு தண்ணீரைப் பெற்றுத்தர வேண்டும்.
தமிழகத்தின் விவசாயம், குடிநீருக்கு பிரதானமாக காவிரி நீர் உள்ளதால், முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் திமுக சொன்னால், காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காதா? இல்லையெனில் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என திமுக தலைவர் காங்கிரஸ் கட்சிக்கு மிரட்டல் விடுக்க வேண்டியதுதானே.
தமிழகத்தில் பல பகுதிகளில் கனிமங்கள் கொள்ளைச் சம்பவத்தை தமிழக அரசு கண்டுகொள்வதில்லை. அதே போன்றுதான் கிணத்துக்கடவு, சாவடி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து லாரிகள் மூலம் நாள்தோறும் 50 டன் வரை கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு தடுக்கவில்லை.
மேலும், பாஜக - அதிமுக கூட்டணி முறிவு குறித்து, அதிமுக துணைப் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளதுதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. அதிமுக இனி வரக்கூடிய தேர்தலில் அமைக்கக்கூடிய கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் மற்றும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் 2 கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக எடப்பாடி பழனிசாமி மாற்றியுள்ளதால், எடப்பாடி பழனிசாமியும் மக்கள் சக்தி படைத்தவராக வருவார்.
இதனால் அதிமுக தன்னிகரற்ற வெற்றியைப் பெறுவோம். மேலும் பாஜக, ஓபிஎஸ், டிடிவி கூட்டணியை ஒப்பிடும் சூழலில் அதிமுக தற்போது இல்லை. 2.25 கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுக, எடப்பாடி பழனிசாமி தலைமையில் விரைவில் ஆட்சி அமையும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வருங்கால முதலமைச்சர் என்று ஏற்றுக்கொள்ளும் கட்சியை, அதிமுக பொதுச் செயலாளர் கூட்டணியில் சேர்த்துக் கொள்வார்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:“பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை போராட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்ப வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!