தீபாவளிப் பண்டிகையின்போது கூட்டம் கூடும் பகுதிகளில், திருடர்கள் கூட்டத்தைப் பயன்படுத்தி நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிச் செல்வார்கள்.
பண்டிகைக்கு முன்பாகவே பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும், திருடர்களுக்கு எச்சரிக்கை விடுத்திடும் வகையிலும் ஈரோடு மாவட்டக் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் பகுதிகளான பூந்துறை சாலை, ரயில் நிலையம், பேருந்து நிலையம், பன்னீர்செல்வம் பூங்கா பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வாகனங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
பேருந்துகள், வாகனங்களில் சந்தேகப்படும்படியான நபர்களின் முகவரி, தொடர்பு எண்களையும் பதிவு செய்து வருகின்றனர். மேலும், பொதுமக்கள், திருடர்கள் பறித்துச் செல்லும் வகையில் பணத்தையோ, நகைகளையோ எடுத்து வர வேண்டாம் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், தீபாவளியை முன்னிட்டு கடைவீதிப் பகுதியின் நான்கு புறமும் 10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு மேடைகளும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.