ஈரோடு: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், ராஷ்டிரீய ஸ்வயம் சேவக சங்கம் (RSS) அமைப்பின் சார்பில், அந்த அமைப்பின் கொள்கைகளை வலியுறுத்தும் வகையில் சீறுடை அணிந்து பேரணி நிகழ்ச்சி நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் நடைபெற்ற பேரணியில், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பங்கேற்றனர்.
நகரின் முக்கிய சாலைகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மேற்கொள்ளும் பேரணிக்காக, ஈரோடு நகர காவல் துறை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் 425க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், ஈரோடு அடுத்த சத்தியமங்கலத்திலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் பேரணி நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் 99வது ஆண்டு துவக்க விழாவையொட்டி நடைபெற்ற பேரணியில், ஏராளமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பங்கேற்றனர். அந்த பேரணியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர் கே.எம்.பச்சியப்பன் என்பவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
அதனை அடுத்து, ரங்கசமுத்திரம் எஸ்.ஆர்.டி.கார்னரில் பகுதியில் இருந்து புறப்பட்ட சேவா சங்க உறுப்பினர்கள் பேரணி, மைசூர் தேசிய நெடுஞ்சாலை, புதிய பாலம், அத்தாணி சாலை வழியாக திப்புசுல்தான் சாலையை சென்றடைந்தது. பேரணியாகச் சென்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் மீது அவ்வமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலர் மலர் தூவி வரவேற்றனர்.