ஈரோடு:தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் பகுதிக்கு சத்தியமங்கலம் வழியாக காரில் ஐம்பொன் சிலைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு மாவட்ட எல்லையான சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியே வந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
காரில் மொத்தம் ஐந்து பேர் இருந்தனர். காரை சோதனையிட்டபோது சீட்டுக்கு அடியில் சாக்கு பைகள் மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். சாக்கு பைகளை பிரித்து பார்த்த போது உள்ளே ஒரு அடி உயரம் ஐந்து கிலோ எடை கொண்ட கிருஷ்ணர், விநாயகர் என இரண்டு ஐம்பொன் சிலைகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.
காரில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்த போது கேரள மாநிலம் தலச்சேரி பகுதியை சேர்ந்த சசிதரன், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில், மற்றும் கர்நாடக மாநிலம் மடிகேரி பகுதியை சேர்ந்த முகமது, ரஷீத், சாகித் பாக், என்பதும் இரண்டு ஐம்பொன் சிலைகளை விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் பகுதிக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து கார் மற்றும் இரண்டு ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் ஐந்து பேர் மீதும் வழக்கு பதிந்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் ஐம்பொன் சிலைகளை விற்றதாக கூறப்படும் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்த சாந்தா என்வரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:மகமாயி அம்மன் கோயில் ஐம்பொன் சிலைகளைக் கைப்பற்றிய அறநிலையத் துறை