ஈரோடு:பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் வால்மிகி. இவர் தனது நண்பர்களான ஜிதேந்திர குமார், வினய்குமார், பவன்குமார், அசோக்குமார், சித்தார்ய குமார், ஆகியோருடன் கடந்த 14 ஆம் தேதி பீகாரில் இருந்த வேலை தேடி கேரளாவிற்கு ரயில் மூலம் சென்றிருக்கிறார். அப்போது பீகாரைச் சேர்ந்த பிபீன் குமார் என்பவர் தனது நண்பர் மூலமாக வால்மியை தொடர்பு கொண்டு தான் வேலை வாங்கித் தருவதாகவும், தன்னுடன் இருக்கும் நண்பர்களை அழைத்துக் கொண்டு ஈரோட்டிற்கு வரும்படியும் கூறியுள்ளார். அவரை நம்பிய வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் ஈரோடு ரயில் நிலையத்திற்குச் சென்றனர்.
ஏற்கனவே ஈரோடு ரயில் நிலையத்தில் பிபீன் குமார் தனது நண்பர்களுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் வந்தவுடன் அவர்களை ஈரோடு பெரிய சேமூர் பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவர்களை அடைத்துவைத்த பிபீன் குமார் கும்பல் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியிருக்கின்றனர்.
மேலும், ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க வேண்டும் என்றும் கொடுத்தால்தான் தங்களை விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். மேலும் ஆன்லைன் மூலமாக அனுப்ப வேண்டும் என்றும் மிரட்டியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பீகாரில் உள்ள தங்களது உறவினர்களைத் தொடர்பு கொண்டு தலா ஒருவருக்கு 10 ஆயிரம் என ஜிபே (Gpay) மூலமாக பணம் பெற்றனர்.
தொடர்ந்து அந்த பணத்தைப் பெற்றுக்கொண்ட பிபீன் குமார் கும்பல், வால்மீகி உள்பட அவரது நண்பர்களை சரமாரியாக தாக்கிவிட்டு, இந்த விவகாரத்தை வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டியுள்ளனர். பின்னர், அவர்களை டெம்போ டிராவலரில் ஏற்றிக்கொண்டு கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கொண்டு சென்று விட்டுச் சென்றனர்.